சட்டவிரோதமாக லாரியில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் காவல்துறையினர் இரவு நேரங்களில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் முத்து, மணிவண்ணன், விநாயகம் போன்ற காவல்துறையினர் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி சுங்கச்சாவடியை கடக்க முயற்சி செய்தது. இதனையடுத்து காவல் துறையினர் அந்த லாரியை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் லாரியில் இருந்த டிரைவர் முன்னுக்குப்பின் முரணாக பதில்களை கூறியதால் சந்தேகமடைந்த காவல்துறையினர் லாரியை பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையில் பார்சல் பெட்டிகளுக்குள் நடுவில் சுமார் 25 லட்சம் மதிப்புள்ள 1,600 கிலோ புகையிலை மற்றும் குட்கா அடங்கிய பாக்கெட்டுகள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் லாரியில் இருந்த 3 பேரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள், சென்னை தாம்பரம் ஓல்டு பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வரும் ராஜகுருவி, விழுப்புரம் மரக்காணம் நடுகுப்பத்தை சேர்ந்த குமார், தூத்துக்குடி மாவட்டம் நல்லூர் பகுதியை சேர்ந்த கோபால் என்பதும், இவர்கள் பெங்களூரிலிருந்து சென்னைக்கு குட்கா கடத்திச் சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவர்கள் 3 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்ததோடு, லாரி மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.