இலங்கைக்கு கடத்துவற்கு முயற்சி செய்த 2 டன் மஞ்சளை காவல்துறையினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை பகுதியில் மஞ்சள் இறக்குமதி தடைசெய்யப்பட்ட நிலையில் தமிழகத்திலிருந்து கடலின் வழியாக சட்டவிரோதமாக கடத்தப்படும் மஞ்சளை காவல்துறையினர் கைப்பற்றி வருகின்றனர். மேலும் கடலோர பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆலந்தலை கடல் வழியாக இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்துவதாக கடலோர பாதுகாப்பு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதிநாயகம் தலைமையில் காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு கடற்கரையில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பகுதியில் சந்தேகப்படும் வகையில் மினி லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது மினி லாரியில் இருந்த சிலர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர். அதன்பின் மினி லாரியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் 35 கிலோ எடையுள்ள 58 மூட்டைகளில் விரலி மஞ்சள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனைதொடர்ந்து 2 ஆயிரத்து 30 கிலோ மஞ்சள் மற்றும் மினி லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சளின் மதிப்பு 2 லட்சம் இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சளை வருவாய்த் துறையினர் மூலமாக சுங்கவரிதுறையினரிடம் ஒப்படைப்பதற்கு காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.