சட்டவிரோதமாக லாரியில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி கடத்துவதை தடுப்பதற்காக காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சோதனை சாவடிகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி வழித்தடமாக கேரள மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் வடசேரி சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த சோதனையில் லாரியில் சாக்கு மூட்டைகளில் அரிசி இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் டிரைவர் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பதும், இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லாரி மற்றும் 22 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து அரசு குடோனுக்கு அனுப்பிவைத்தனர். அதன்பின் டிரைவர் ராஜன் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.