ஓடும் லாரியில் திடீரென தீ கொழுந்துவிட்டு எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இதனை முருகேசன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து தமிழக-கர்நாடக மாநில எல்லையான ஈரோடு மாவட்டம் ராமாபுரம் பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டிருக்கும்போது திடீரென அதிலிருந்து புகை ஏற்பட்டது. இதனால் முருகேசன் லாரியை நிறுத்தி விட்டு வெளியே குதித்துவிட்டார். அதன்பின் லாரி முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இதுகுறித்து டிரைவர் முருகேசன் சாம்ராஜ்நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின்படி தீயணைப்புதுறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்து லாரியில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. எனவே தீப்பிடித்த போது முருகேசன் லாரியில் இருந்து இறங்கியதால் உயிர் தப்பி விட்டார். இந்த விபத்து லாரியின் பேட்டரியில் இருந்து வெளிவந்த தீப்பொறியில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.