லாரியில் அதிக பாரம் ஏற்றி வந்த காரணத்தினால் காவல்துறையினர் ஓட்டுநருக்கு அபராதம் விதித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள விருகாவூர் பகுதியில் ஜானி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லாரியில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வேம்பூர் பகுதியை நோக்கி வந்துள்ளார். அப்போது கூட்டுரோடு அருகாமையில் வந்து கொண்டிருக்கும் போது காவல்துறையினர் லாரியை மறித்துள்ளனர். அதன்பின் லாரியை சோதனை செய்த போது விதிமுறைகளை மீறி அதிகமான பாரம் ஏற்றி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் ஓட்டுனருக்கு அபராதம் விதித்துள்ளனர். அந்த அபராதத் தொகை கட்டிவிட்டு அங்கிருந்து லாரியை எடுத்து சென்ற ஜானி சற்று தூரம் தள்ளி லாரியை நடுரோட்டில் நிறுத்தி உள்ளார். பின்னர் கீழே இறங்கி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த சாலையில் சென்றவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அதன் பின் ஜானி காவல்துறையினருக்கு எதிராக கோஷமிட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று ஜானியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து தீக்குளிக்க முயற்சி செய்ததாக கூறி சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜானியை கைது செய்துள்ளனர்.