உலகம் முழுவதும் அமைதியாக அன்பு நிறைந்த சூழலாக இருப்பதற்கு சிரிப்பு முக்கிய காரணம் என்று சொல்லலாம். எத்தனை துன்பம் வந்தாலும் பிஞ்சுக் குழந்தைகளின் சிரிப்பு மனதில் இருக்கும் மிகப்பெரிய அடக்கமுடியாத துயரத்தையும் நொடிப்பொழுதில் மறக்கடிக்கும். மூன்று மணி நேரம் ஓடும் படங்களிலும் நகைச்சுவையை ஒரு பகுதியாக வைப்பது 3 மணி நேரத்தில் சில நிமிடங்களாவது நம்மை சிரிக்க வைப்பதற்கு தான். அதற்காகவே பல நகைச்சுவை கலைஞர்களும் பாடுபடுகின்றனர். சிரிப்பு என்பது நகைச்சுவைக்காக மட்டுமல்லாது நமது உடல் நலம் மற்றும் மன நலனையும் சிராக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
சிரிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை சிரிப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இயற்கையான முறையில் சிரித்து உடல்நலத்தை மேம்படுத்துவதை விட்டு இப்போது பல இடங்களில் சிரிப்பு யோகா பயிற்சி கொடுக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து ஹாஹோ சிரிப்பானந்தா கூறுகையில் “2010ஆம் ஆண்டு டாக்டர் மதன் கட்டாரியா விடம் சிரிப்பு யோகாவை கற்றுக் கொண்டு வந்தேன். அதிலிருந்து எனது வாழ்க்கையில் பார்க்கும் அனைவரையும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்கின்றேன்.
சிரிப்பு யோகா என்றால் பெயரிலிருந்தே சிரிப்பும் யோகாவும் இணைந்த ஒரு கலை என்பது தெரியவருகின்றது. யோகா என்றால் ஆசனங்கள், மூச்சுப்பயிற்சி, தியானம் என அனைத்தையும் இணைத்து சிரிப்புடன் சேர்த்து கொடுக்கப்படுவது தான் சிரிப்பு யோகா. சிரிப்புடன் இணைந்த கைதட்டுதல் பயிற்சி, மூச்சுப் பயிற்சியுடன் இணைந்த சிரிப்பு பயிற்சி, குழந்தைகளைப் போன்று விளையாடுதல் இப்படி சிறப்பு பயிற்சிகளை பிரித்து வைத்துள்ளோம். முதலில் ஆரம்பிக்கும் பொழுது செயற்கையாக ஆரம்பிக்கப்படும் சிரிப்பு பின்னர் சிரிக்க சிரிக்க இயற்கையாகவே சிரிக்க ஆரம்பிக்கிறோம்.
உடலுக்கு நாம் உண்மையாக சிரிக்கிறோமா அல்லது போலியாக சிரிக்கிறோமா என்பது தெரியாது. அதனால் சிரித்தாலே உடலுக்கு தேவையான அனைத்து பலன்களையும் கொடுக்கின்றது. மிகவும் கஷ்டப்பட்டு தியானம் செய்து அடையக்கூடிய பலனை ஒரு நிமிடம் சிரிப்பின் மூலம் பெற்றுவிட முடியும். சிரிப்பு என்பது வேறு ஒன்றுமல்ல மூச்சை பெரிதளவில் வெளிப்படுத்துவது தான் சிரிப்பு. அது உடலில் இருக்கும் ரத்தத்தில் அதிக அளவு ஆக்ஸிஜனை கலக்கிறது உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை ஒவ்வொரு உயிரணுக்களும் உற்சாகம் ஆகின்றது. இதுதான் சிரிப்பு யோகா. இந்த சிரிப்பு யோக விற்கு பெரும் வரலாறு இருக்கின்றது.
முன்னர் எல்லாம் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர் சிரிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. எப்போதும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் சிரித்து வாழ்ந்து வந்தனர். ஆனால் இப்போதைய காலகட்டத்தில் கூட்டுக்குடும்பம் என்றால் இரண்டு பேர் சேர்ந்ததுதான். எனவே சிரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போனது. சிரிப்பது நீண்ட சிரிப்பாக இருக்க வேண்டும். சிரிப்பதற்.கே இப்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது அதுதான் ஆரோக்கியம் தரும் சிரிப்பாகவும் இருக்கும்.
பழங்காலத்தில் வாய்விட்டு சிரிப்பது இருந்தது ஆனால் இப்போது வாய்விட்டு சிரிப்பது இல்லை. அதிலும் பெண்கள் சிரிப்பதே இல்லை. பாதி நேரம் சமையலறையில் இருக்கின்றன. அல்லது சாப்ட்வேர் கம்பெனியில் கம்ப்யூட்டரில் அடங்கி இருக்கின்றனர். மனிதர்கள் பணம் சம்பாதிக்கக்கூடிய இயந்திரங்களாக மாறிவிட்டனர். அப்போது இந்த சிரிப்பு சஞ்சீவினி மூலிகையாக மாறிக்கொண்டே இருக்கின்றது. எனவே இந்த சிரிப்பை ஒரு பயிற்சியாக தொடர்ந்து செய்யும்பொழுது உடலளவிலும் மனதளவிலும் நல்ல பலனைக் கொடுக்கும்.
சிரிப்பு மூலமாக உலக அமைதியை உருவாக்கவும் மகிழ்ச்சியை உருவாக்கவும் கொண்டாடப்பட்டதே உலக சிரிப்பு தினம். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது மட்டுமல்ல பேயும் விட்டுப்போகும். பேய் என்றால் உடல் நிலை கோளாறுகள், கல்வியறிவின்மை, துக்கம், சோம்பல், கர்வம், பொறாமை, பேராசை என அனைத்தும் விட்டுப்போகும். சிரிப்பது எப்படி சிரிக்க வேண்டும் என்றால் ஒரு வெகுளித்தனமான சிரிப்பாக நீண்ட நெடு இயல்பான சிரிப்பாக இருக்க வேண்டும்.