இன்று அதிமுக தலைமையகம் சென்ற அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அங்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். அப்போது பேசிய அவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுக்குழு கூடி, அந்த பொதுக்குழுவிலே பல முக்கிய தீர்மானங்கள் முடிவுகள் எடுக்கப்பட்டு, அந்த தீர்மானங்களின் அடிப்படையிலும், முடிவுகளின் அடிப்படையிலும் கழகத்திற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்றும்,
நீதிமன்ற உத்தரவு:
அதோடு இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டு, அதற்குப் பிறகு பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர், அமைப்புச் செயலாளர்கள், பல பொறுப்புக்கள் உருவாக்கப்பட்டு, இன்றைய தினம் நீதிமன்ற உத்தரவுப்படி தலைமைக் கழகம் எங்கள் தரப்புக்கு தரப்பட்டது.அதன் அடிப்படையில் இடைக்கால பொதுச்செயலாளராக நான் பொறுப்பேற்று என்னோடு துணை பொதுச்செயலாளர், பொருளாளர்கள், தலைமை நிலைய செயலாளர், அவை தலைவர் அனைவரும் இன்றைக்கு தலைமை கழகம் வந்துள்ளோம்.
மரியாதை:
இதய தெய்வம் புரட்சித்தலைவர் தலைவர் அவர்கள் சிலைக்கும், மாண்புமிகு அம்மாவுடைய சிலைக்கும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, தலைமைக் கழகத்திற்கு வந்து, உங்களையெல்லாம் சந்தித்து இருக்கின்றோம். இந்த சிறப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள தலைமை கழக நிர்வாகிகளுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி:
அதோடு பொதுக்குழுவிலே ஒருமனதாக கழகத்தினுடைய எதிர்கால நன்மையை கருதி, ஒற்றை தலைமை முடிவு செய்தோம். அதோடு இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு செய்தமைக்கும், கழகப் பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி சமர்ப்பிக்க கடமைப்பட்டுள்ளேன்.
தீயிட்டு கொளுத்தி:
இன்றைய ஆட்சியாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு. 11/07/2022 அன்று கழகப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று இருக்கின்ற அந்த சமயத்தில், ஒரு சிலர் கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, பிரதான கேட்டை உடைத்து, தலைமைக் கழகத்தில் இருக்கின்ற கதவுகளை உடைத்து, உள்ளே புகுந்து அறையினுடைய கதவுகளை எல்லாம் உடைத்து, அறைக்குள் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களை எல்லாம் சேதப்படுத்தி, அந்த பொருட்களை எல்லாம் வெளியே எடுத்து வந்து, தீயை வைத்துக் கொளுத்தி, பல்வேறு பொருட்கள் கொள்ளையடித்துச் சென்று இருக்கிறார்கள்
நடவடிக்கை:
கழகத்திற்கு சொந்தமான இடத்தினுடைய பத்திரங்கள் எல்லாம் தலைமைக் கழகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது. அதையும் திருடி சென்றிருக்கிறார்கள். அதோடு தலைமைக் கழகத்திலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தி இருக்கிறார்கள். இப்படி வேண்டுமென்றே திட்டமிட்டு, கட்சிக்கு களங்கம் விளைகின்ற விதத்தில் செயல்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்திற்கு புகார் செய்யப்பட்டும், இந்த விடியா திமுக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சிபிசிஐடி:
அதோடு நாங்கள் நீதிமன்றம் சென்றோம், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது, விரைவாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று. அப்பொழுதும் கிடப்பிலே போட்டார்கள். மீண்டும் நீதிமன்றம் சென்றோம், அப்போது தான் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என்று நீதிமன்றத்திலே தெரிவிக்கப்பட்டு, அதன்படி நேற்றைய தினம் தான் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் வந்து தடயங்களை எல்லாம் சேகரித்து சென்று இருக்கிறார்கள்.
சட்ட ஒழுங்கு:
32 ஆண்டுகள் ஆண்டு ஆட்சி செய்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி, பிரதான எதிர்க்கட்சி தமிழகத்திலே.. எங்களுடைய கட்சியின் அலுவலகம் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டு, பொருட்கள் திருடப்பட்டதற்கு நாங்கள் புகார் கொடுத்தும், எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்த திராவிட முன்னேற்றக் கழக விடியா அரசின் சட்ட ஒழுங்கு எவ்வளவு சீர்குலைந்து இருக்கிறது என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும்.