பாஜகவின் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் காஷ்மீர் தொடர்பான வாக்குறுதிகளுக்கு அம்மாநில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 11 தேதி தொடக்கி 7 கட்டமாக நடைபெறுகின்றது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையை ஏப்ரல் 9ஆம் தேதிக்குள் வெளியிடவேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து அளிக்கக்கூடிய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை நீக்கப்போவதாக தெரிவித்திருந்தது. ஏனெனில் இந்தப் பிரிவுகள் மக்களிடையே பாகுபாடுகளை உண்டாக்குவதாகவும், காஷ்மீர் மாநில பெண்களுக்கு எதிராக இருப்பதாலும் அவற்றை நீக்கவுள்ளோம் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கைக்கு காஷ்மீர் மாநிலத்திலுள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேசிய மாநாட்டு கட்சி தலைவரான ஃபரூக் அப்துல்லா, கூறுகையில் , “அரசியலமைப்புச் சட்ட பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை நீக்கி விட்டு எங்களின் உரிமைகளை மத்திய அரசு பறிக்க நினைத்தால் நாங்கள் கடுமையாக போராடுவோம். அத்துடன் பிரிவு 370 நீக்கப்பட்டால் இந்தியாவிற்கும் , ஜம்மு-காஷ்மீருக்குமான உறவு முறிக்கப்படும்” என்று கண்டனம் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி கூறுகையில் , “பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பு, விவசாயிகள் பிரச்னை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகிய அனைத்து வகையான மக்கள் பிரச்னையிலும் பாஜக தோற்றுவிட்டது. அரசியலமைப்பு சட்டபிரிவு 370 ஜம்மு-காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கிறது. அதனால் இப்பிரிவை அழித்தால் ஜம்மு-காஷ்மீரில் இந்தியாவின் அதிகாரம் செல்லாது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் பகுதி இந்தியாவிலிருந்து விடுதலை பெற்றுவிடும்.” என்று கூறினார். அதே போல ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி தலைவர் சஜாத் லோன் கூறுகையில் , “ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சட்டப்பிரிவு பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவை புனிதமானவை. இதனை நீக்குவது மிகப்பெரிய பேரிடர் ஆக அமையும்” என்று தெரிவித்தார்.