கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடிய பிராவோ, ரஷித் கான், முகமது நபி ஆகிய முன்னணி வீரர்கள் ஐபிஎல்லில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று விட்டனர்..
2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபு தாபி மற்றும் ஷார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடக்கிறது.. முதல் போட்டி வருகிற 19ஆம் தேதி தொடங்குகிறது.. டி20 ஐபிஎல் தொடரில் விளையாடும் முக்கியமான வீரர்கள் கரீபியின் பிரிமீயர் லீக்கில் பங்கு பெற்றுள்ளனர். இதனால் அவர்களால் முன்னதாகவே அணியுடன் இணைந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல முடியவில்லை..
தற்போது போட்டி முடிந்து விட்டதால் ஒவ்வொரு வீரர்களாக அடுத்தடுத்து ஐக்கிய அரபு அமீரகம் சென்ற வண்ணம் இருக்கின்றனர்.. நேற்று காலை சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் யுஏஇ-க்கு சென்றடைந்தார்.
இந்தநிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர்களான ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் மற்றும் முகமது நபி ஆகியோரும் சென்றடைந்துள்ளனர்.. அவர்கள் அனைவரும் அணிக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் ஹோட்டலில் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வார்கள்.. அதனைத்தொடர்ந்து அணியுடன் சேர்ந்து போட்டியில் விளையாடுவார்கள்.