பொது நோக்கங்களுக்காக அரசிடம் ஒப்படைக்கப்படும் கோவில் நிலங்களை குத்தகைக்கு விடவோ, விற்பனை செய்யவோ, செயல் அலுவலர்கள் பரிந்துரை செய்யும் போது மாவட்ட வருவாய் அலுவலர்கள் சான்று பெறுவது கட்டாயம் என அறநிலை துறை உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமாக மொத்தம் 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதில் 1.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் மட்டுமே குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. மற்ற நிலங்கள் காலியாக உள்ளது.
நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் எந்தவித பயன்பாடும் இல்லாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொது நோக்கங்களுக்காக குத்தகை அல்லது விற்பனை செய்யலாம் என்று இந்து அறநிலை துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக பேருந்து நிலையம், குடிநீர் தொட்டிகள், குடிநீர் பம்பிங் ஸ்டேஷன், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு சார்ந்த கட்டிடங்களை கட்டிக்கொள்ள அறநிலைத்துறை சட்டப்பிரிவு 54 இன் படி அனுமதி உள்ளது.
இதன் மூலம் கோவிலுக்கு வருமானம் வருகிறதா என்று பார்த்து அந்த நிலங்களை குத்தகைக்கு விற்பனை செய்வதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. நிலங்களின் மதிப்பை மாவட்ட வருவாய் அலுவலர்கள் நிர்ணயம் செய்து அது தொடர்பாக அவர்களிடமிருந்து சான்று பெற வேண்டும். அதன் பிறகே இணை ஆணையர் மூலம் ஆணையருக்கு பரிந்துரை செய்யும் நடைமுறையை பின்பற்ற வேண்டும். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.