தமிழகம் முழுவதும் மண்டல வாரிய திமுக வழக்கறிஞர் குழுக்களை கட்சி தலைமை அறிவித்துள்ளது. “சட்டப் பாதுகாப்புக் குழு” என்ற பெயரில் திமுகவின் 7 மண்டலங்களுக்கும் வழக்கறிஞர் குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவினர் மீது மத்திய, மாநில அரசுகள் தொடுக்கும் வழக்குகளை எதிர்கொள்ள இந்த குழுக்கள் உதவும் என்றும் அதிமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மீது புகார் குறித்து சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் வழக்கறிஞர்கள் குழுக்கள் உதவும் என்றும் தகவல் அளித்துள்ளனர். முன்னதாக கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது.
இதனை தொடர்ந்து ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் ஆர்.எஸ்.பாரதி மீது புகார் அளித்திருந்தார். இதனால் ஆர்.எஸ்.பாரதி மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து ஆர்.எஸ்.பாரதியின் கைது நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏக்கள் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ரங்கநாதன், ரவிச்சந்திரன், ராஜா உட்பட 96 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதேபோல அதிமுக மற்றும் பாஜக அரசு திமுகவினர் மீது வழக்கு தொடர்ந்து வழக்கு தொடர்ந்த வண்ணம் இருந்தனர். இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. திமுக நிர்வாகிகள் மீது தொடுக்கும் வழக்குகள், நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்ற நிலையில், அதில் பொய் வழக்குகளை எதிர்த்து போராடுவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மாவட்ட வாரியாக அதிமுக அரசின் ஊழல் பட்டியலை வெளியிட திமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மாவட்ட வாரியாக ஊழல் பட்டியலை வெளியிடவும், திமுக தொண்டர்களை பாதுகாக்க மாவட்ட வாரியாக குழு அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுத்ததன் படி “சட்டப் பாதுகாப்புக் குழு” என்ற பெயரில் திமுகவின் 7 மண்டலங்களுக்கும் வழக்கறிஞர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.