சுவாதி, முத்தியம், பிரேமா, லீடர் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகர் கொல்லபுடி மாருதி ராவ் (வயது 80). 1939ஆம் ஆண்டு ஆந்திரமாநிலம் விஜயநகரம் என்ற இடத்தில் பிறந்த இவர், தெலுங்கு திரையுலகின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான மாருதி ராவ் ஆந்திர அரசின் உயரிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். வயதுமூப்பு காரணமாக இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், நேற்று காலமானார். மாருதி ராவ் மறைவுக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் , தெலுங்கு, தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் நடித்த முதல் படமான பிரேம புஸ்தகம் திரைப்படத்தை இயக்கியவர் இவர் என்பது நினைவுகூரத்தக்கது.