தொடர்ந்து பெய்யும் மழையால் அதிகமான எலுமிச்சை பழங்கள் செடியிலே அழுகி வருவதால் விவசாயிகள் வருத்தத்தில் இருக்கின்றனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் எலுமிச்சை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்பின் எலுமிச்சை பழங்கள் மரங்களிலேயே அழுகியும், பின் கரும்புள்ளி நோய் தாக்குதலினால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டும் இருக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக விவசாயிகள் கூறும் போது, அதிக செலவு செய்து எலுமிச்சை மரங்களைப் பராமரித்து வந்தோம். அதில் அமோக விளைச்சலை கொடுத்து வந்த நிலையில் தொடர்மழை காரணத்தினால் ஏராளமான பழங்கள் அழுகி வீணாகியதினால் அவற்றை விற்பனை செய்ய முடியாமல் சாலையில் கொட்டி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நோய் தாக்குதலால் பழங்கள் சேதம் அடைந்து வருவதால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு, நோய் தாக்குதலில் இருந்து எலுமிச்சை பழங்களை பாதுகாப்பதற்கு உரிய ஆலோசனை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளனர்.