கிரிக்கெட் போட்டிகளில் பவுண்டரி, சிக்சர் என அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள் பலர் இருந்தாலும், தொடர்ந்து ஆறு பந்துகளிலும் ஆறு சிக்சர் அடித்த வீரர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். வெஸ்ட் இண்ட ஜாம்பவான் கெரி சோபர்ஸ், தென் ஆப்பிரிக்காவின் கிப்ஸ், இந்தியாவின் ரவி சாஸ்திரி, யுவராஜ் சிங், இங்கிலாந்தின் ரோஸ் ஒயிட்லி, ஆப்கானிஸ்தானின் ஹஸரதுல்லாஹ் சஸாய் ஆகியோர் தொடர்ந்து ஆறு பந்துகளில் ஆறு சிக்சர் அடித்துள்ளனர். தற்போது அந்த வரிசையில் ஏழாவது வீரராக இடம்பிடித்துள்ளார் நியூசிலாந்தைச் சேர்ந்த லியோ கார்டர்.
இந்தியாவுக்கு ஐபிஎல் டி20 போல், நியூசிலாந்துக்கு சூப்பர் ஸ்மாஷ் டி20 தொடர். இதில், கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தால் நார்தன் நைட்ஸ் – கென்டர்பரி அணிகள் மோதின. இதில், 220 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கென்டர்பரி அணியின் இடதுகை பேட்ஸ்மேன் லியோ கார்டர் ஆட்டத்தின் தேவ்சிச் வீசிய 16ஆவது ஓவரில் ஃபைன் லெக், மிட் விக்கெட், ஸ்கொயர் லெக் என ஆறு பந்துகளிலும் தொடர்ச்சியாக ஆறு சிக்சர்கள் அடித்து அமர்களப்படுத்தினார்.
இதன் மூலம், கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆறு பந்துகளில் ஆறு சிக்சர் அடித்த ஏழாவது வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். இதுமட்டுமின்றி டி20 போட்டிகளில் யுவராஜ் சிங், ரோஸ் ஒயிட்லி, ஹஸரதுல்லாஹ் சஸாய் ஆகியோருக்கு அடுத்தபடியாக ஆறு பந்துகளிலும் ஆறு சிக்சர் அடித்த நான்காவது வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இதில் கிப்ஸ், யுவராஜ் சிங் ஆகியோர் மட்டுமே சர்வதேச அளவிலான போட்டிகளில் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் அடித்து மேஜிக் செய்துள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது.
இவரது அதிரடியால் 15 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்களிலிருந்த கென்டர்பரி அணியின் ஸ்கோர் 16ஆவது ஓவரில் 192 ரன்களை எட்டியது. இதனால், கென்டர்பரி அணி 18.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்களை அடித்து இப்போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
லியோ கார்டர் 29 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், ஏழு சிக்சர்கள் என 70 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆறு பந்துகளில் ஆறு சிக்சர் அடித்த இவரது வீடியோவை பார்க்கும்போது யுவராஜ் சிங்கின் ஆறு பந்தில் ஆறு சிக்சர் அடித்ததுதான் நினைவுக்கு வருகிறது.
36 off an over! 😲
Leo Carter hit 6 sixes in a row and the @CanterburyCrick Kings have pulled off the huge chase of 220 with 7 balls to spare at Hagley Oval! 👏
Scorecard | https://t.co/uxeeDsd3QY#SuperSmashNZ #cricketnation
🎥 SKY Sport. pic.twitter.com/nuDXdp1muG— Dream11 Super Smash (@SuperSmashNZ) January 5, 2020