ஹாலிவுட்டின் ஆஸ்கர் நாயகன் லியார்னடோ டிகாப்ரியோ, சுற்றுச்சுழல் சார்ந்த பல கருத்துகளை அவ்வப்போது சில பிரச்னைகள் ஏற்படும் போது தெரிவித்துவந்துள்ளார். சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோது கூட அவரது கருத்து பல தரப்பினரையும் கவர்ந்தது. சமீபத்தில் அமேசான் காடுகளில் ஏற்பட்ட கடும் தீ விபத்தை பற்றிக் கூட தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார் டிகாப்ரியோ.
தற்போது அவர் மீது பெரிய குற்றச்சாட்டு ஒன்றை பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ முன்வைத்திருக்கிறார். அதாவது அரசு சாரா அமைப்புகள் அமேசான் காடுகளில் தீ மூண்டதற்குப் பெரும் உதவி புரிந்ததாகவும், அதற்கு 5 லட்சம் டாலர் பணத்தை லியார்னடோ உதவியின் பேரில் காரணம் காட்டி கொடுத்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அதிபர் சயீர் பொல்சனாரூ கூறியதாவது, ‘புகைப்படம் எடுங்கள், படம் எடுங்கள், அதை ஒரு என்.ஜி.ஓவிடம் கொடுங்கள், அதை என்.ஜி.ஓ பரப்பி, பிரேசிலுக்கு எதிராக பிரசாரம் செய்து, லியார்னடோவுடன் அறிமுகமாகட்டும், லியார்னடோ 5 லட்சம் டாலர் நன்கொடை வழங்கட்டும், அதன் ஒரு பகுதி யார் தீ வைக்கிறார்களோ அவர்களை சென்றுசேர்ந்தது, சரியா?’
இந்தக் குற்றச்சாட்டை லியார்னடோ மறுக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டை காப்பாற்ற போராடும் பிரேசில் மக்களுக்கு உதவிகரமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் அந்த நிறுவனங்களுக்கு நிதி வழங்கவில்லை என்ற வாதத்தையும் முன்வைத்துள்ளார்.