சென்னையை அடுத்த செங்கல்பட்டு அருகே சிறுத்தை சுற்றித் திரிவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
சிங்கப்பெருமாள் கோவில் அருகே சின்னசெங்குன்றம்,அலமேலுமங்காபுரம் ஆகிய இடங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும்,கடந்த 4 நாட்களாக அந்த இடங்களில் இருக்கும் ஆடுகள்,நாய்களை கடித்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சிறுத்தை நடமாட்டதிற்கான கால் தடங்கள் இருப்பதாகவும்,சிறுத்தை நடமாட்டத்தை சிலர் பார்த்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இத்தகவல் அறிந்து வந்த 10 பேர் கொண்ட வனத்துறையினர் அலமேலுமங்காபுரம் அருகே காப்புக்காட்டில் 5 நிமிடத்திற்கு ஒரு முறை எந்த ஒரு அசைவையும் துல்லியமாக படம் பிடிக்கக் கூடிய அதிநவீன கண்காணிப்பு கேமராவை பொருத்தியுள்ளனர். ஓரிரு நாட்களில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து சிறுத்தையை உயிருடன் பிடித்து வனவியல் பூங்காவில் ஒப்படைத்து விடுவோம் என்று வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.