வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இறந்த சிறுத்தையை வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து எரித்துவிட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் அம்பை ஊர்க்காடு தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இறந்த நிலையில் சிறுத்தை ஒன்று கிடப்பதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த சிறுத்தையை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அதன்பிறகு சிங்கம்பட்டி காப்புக்காடு பகுதியில் வைத்து சிறுத்தையின் உடலை எரித்துவிட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது சிறுத்தை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.