சிறுத்தை ஒன்று உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதியில் காட்டெருமை, சிறுத்தை, புலி, யானை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது கோடை காலம் நிலவுவதால் வனப்பகுதியில் ஏற்பட்ட வறட்சி காரணமாக இந்த வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் மானாம்பள்ளி வனச்சரக பகுதிக்கு உட்பட்ட எஸ்டேட் பகுதியில் உடல் முழுவதும் காயங்களுடன் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தையை உடலை மீட்டனர்.
அதன் பின் துறை பயிற்சி மைய உதவி வனபாதுகாவலர் செல்வம், உதவி வன பாதுகாவலர் பிரசாந்த் போன்ற தலைமையில் அரசு கால்நடை டாக்டர் மெய்யரசன் இறந்த சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளார். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, உயிரிழந்தது 4 வயது ஆண் சிறுத்தை எனவும், அதன் உடலில் இருக்கும் காரியங்களைப் பார்க்கும் போது மற்ற விலங்குகளுடன் சண்டை போட்டதன் காரணமாக இறந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சிறுத்தை சாலையை வேகமாக நடக்க முயன்ற போது அவ்வழியாக சென்ற வாகனங்கள் மோதியதனாலும் உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.