தேயிலை தோட்ட பகுதியில் பெண் சிறுத்தை இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் டெரேமியா என்ற கிராமத்திற்கு அருகில் இருக்கும் தேயிலை தோட்டத்திற்குள் வன விலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனை அடுத்து இந்த தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் இறந்து கிடந்த சிறுத்தையின் உடலை பார்வையிட்டு பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, இறந்து கிடந்தது 9 மாத பெண் சிறுத்தை எனவும், அதன் உடலில் இருக்கும் காயங்களில் ஆராய்ந்து பார்த்தால் பிற வனவிலங்குகள் தாக்கியதால் சிறுத்தை இறந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.