Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கேட்ட சத்தம்… நொடி பொழுதில் தப்பித்த குடும்பம்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

நள்ளிரவு நேரத்தில் ஓடுகளை உடைத்து சிறுத்தை வீட்டிற்குள் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் யானை, காட்டெருமை, சிறுத்தை, புலி போன்ற ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இந்நிலையில் வால்பாறையில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் சின்னம்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மூன்று பேரக்குழந்தைகளுடன் வீட்டில் உள்ள ஒரு அறையில் படுத்து தூங்கியுள்ளார். மேலும் இவருடைய மகன் மற்றொரு அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு நேரத்தில் திடீரென சின்னம்மா வீட்டின் ஓடுகள் உடைந்து கீழே விழுந்தன. இதனை கேட்டதும் சின்னம்மா எழுந்து பார்த்த போது தான் ஓடுகளை உடைத்து வீட்டிற்குள் சிறுத்தை குதித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக சின்னமாக தனது மூன்று பேரக் குழந்தைகளையும் மற்றொரு அறைக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்  சின்னமாவும் அந்த அறைக்கு செல்ல முயற்சித்த போது, சிறுத்தை திடீரென அவர் மீது பாய்ந்து விட்டது. ஆனாலும் உடனடியாக சின்னம்மா தப்பித்து அந்த அறைக்குள் சென்று கதவை அடைத்து விட்டார். இருப்பினும் அவரது கையில் சிறுத்தையின் நகம் கீறியதால் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த சிறுத்தை வீட்டிற்குள் அங்குமிங்கும் நடமாடி பின் உடைந்த மேற்கூரை வழியாக வெளியே தப்பித்து ஓடி விட்டது. இதனைதொடர்ந்து சின்னம்மாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த மானாம்பள்ளி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்பகுதியில் வனத்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவதோடு, சிறுத்தையை பிடிப்பதற்காக இரண்டு குண்டுகள் வைத்துள்ளனர். ஆனாலும் அதில் சிக்காமல் சிறுத்தை தப்பித்து செல்வது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |