சிறுத்தையை படிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சிறுத்தை ஒன்று தனது குட்டியுடன் உலா வந்துள்ளது. மேலும் சிறுத்தை கூசுமலைப்பகுதியில் நாய்கள் மற்றும் ஆடுகளை வேட்டையாடியதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்ததில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கூசுமலைப்பகுதியில் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வனத்துறையினர் அங்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர். இதனையடுத்து நாய் ஒன்றை கூண்டுக்குள் கட்டி சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு 2 கூண்டுகளை வைக்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.