குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் எல்க்ஹில் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்துவிட்டது. இந்த சிறுத்தை அப்பகுதியில் இருக்கும் சாலமோன் என்பவரது வீட்டு வளாகத்தில் கட்டி வைத்திருந்த வளர்ப்பு நாயை கவ்வி சென்றுள்ளது.
இதனையடுத்து உயிரிழந்த அந்த நாயை சிறுத்தை குன்னூர்-கோத்தகிரி சாலையில் இருக்கும் விருந்தினர் மாளிகை முன்பு போட்டு விட்டு வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் நாயின் உடலை பார்வையிட்டுள்ளனர். மேலும் வனத்துறையினர் அப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.