புதருக்குள் பதுங்கியிருந்த புலி விவசாயியை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் கிருஷ்ணன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணன் தனது வீட்டில் இருந்து மதியம் 1 மணி அளவில் மண்வயல் பஜாருக்கு நடந்து சென்றுள்ளார். இதனை அடுத்து கிருஷ்ணன் ஆற்று வாய்க்காலை கடக்க முயற்சி செய்த போது அங்குள்ள புதருக்குள் மறைந்திருந்த புலி திடீரென கிருஷ்ணன் மீது பாய்ந்து அவரை அடித்து புதருக்குள் இழுத்துச் சென்றுள்ளது. இதனை பார்த்ததும் அருகில் இருந்த நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் சத்தம் போட்டுள்ளனர். இந்த சத்தத்தை கேட்டதும் கிருஷ்ணனை அங்கேயே விட்டுவிட்டு புலி தப்பி ஓடி விட்டது. ஆனால் படுகாயம் அடைந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று கிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்துள்ளனர். ஆனால் கிராம மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கேரளாவில் வழங்குவது போல வன விலங்குகள் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் கிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.