தேடப்படும் புலியின் தலையில் காயம் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடி பகுதியில் வனத்துறையினர் புலியை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய புலிகளின் உருவங்கள் தேடப்படும் புலி இல்லை என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது தேவன்-1 பகுதியில் பதுங்கி இருந்த புலியினை ஆய்வு செய்த போது வயது முதிர்வு காரணமாக அது இரையை வேட்டையாட முடியாத நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் அந்த புலியின் தலையில் காயங்கள் உள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாயாறு தொகுதியில் புலி ஒரு மாட்டை அடித்து கொன்றுள்ளது. அந்த இறந்த மாட்டின் அருகில் கிடந்த புலியின் ரோமத்தை சேகரித்து ஹைதராபாத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதனையடுத்து சுமார் 90 சிசிடிவி கேமராக்கள் வனப் பகுதியில் பொருத்தப்பட்ட போதிலும் புலியின் உருவம் அதில் பதிவாகவில்லை. எனவே உடல் நலம் பாதிக்கப்பட்ட புலி அடர்ந்த புதருக்குள் இருக்கலாம் எனவும், அது குறித்த உறுதியான தகவல் விரைவில் கிடைத்து விடும் எனவும் தெரிவித்துள்ளனர்.