நடுரோட்டில் சிறுத்தை அமர்ந்திருந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் சிறுத்தை, புலி, காட்டெருமை, காட்டு யானை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். இந்த காட்டு விலங்குகள் அடிக்கடி அப்பகுதியிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இந்நிலையில் மாங்கரை சோதனை சாவடி அருகே இருக்கும் மலைப்பாதை விநாயகர் கோவில் எதிரில் சாலை நடுவே ஒரு சிறுத்தை அமர்ந்துள்ளது. இதனையடுத்து அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிறுத்தையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு சிறுத்தையை செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர்.
இந்த சிறுத்தை சிறிது நேரம் கழித்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, ஏராளமான வாகனங்கள் சென்று வரும் ஆனைகட்டி சாலையில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவது இல்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே வாகன ஓட்டிகளுக்கு அவ்வழியாக இரவு நேரத்தில் பயணம் செய்ய அச்சமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் வனத்துறையினர் தினமும் பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து சமூக வலைதளங்களில் நடுரோட்டில் சிறுத்தை அமர்ந்திருந்த வீடியோ வைரலாகி வருகிறது.