செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தச்சூர் பகுதியை சுற்றியுள்ள விவசாயிகளுக்கு மழைக் காலங்களில் நெற் பயிர்களை வீணாகாமல் பாதுகாப்பதற்கு தார்ப்பாய் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தார்ப்பாய் வழங்கினார். அதன்பின் ஜெ. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்த வருடத்தில் 94 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும். அதன் பிறகு நெற் பயிர்கள் மழையில் நனைந்து வீணாவதால் அதை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சுமார் 2.86 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை பாதுகாக்கும் விதமாக மூடிய குடோன்கள் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளும் மாற்றப்பட்டு இன்னும் 6 மாத காலத்துக்குள் புதிய சேமிப்புக் கிடங்குகள் கட்டப்படும். தற்போது டெல்டா மாவட்டங்களில் புதிய சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த வருடத்தில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் பெறுவது தெரிய வந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.