Categories
அரசியல் மாநில செய்திகள்

நடந்தது இருக்கட்டும்… நடக்கப்போவதைக் கவனியுங்கள்… எடப்பாடி கறார்!

உள்ளாட்சித் தேர்தலில் நடந்தது இருக்கட்டும்; இனி நடக்கப்போவதைப் பாருங்கள் என டெல்டா மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடம் எடப்பாடி கறாராகத் தெரிவித்துள்ளார்.

அதிமுக கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து அதிமுக ஆலோசனைக் கூட்டம் நேற்று தொடங்கி, 13-ஆம் தேதி வரை காலை, மாலை என இரு பிரிவுகளாக நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

முதல்நாளான நேற்று காலை டெல்டா மாவட்ட அமைச்சர்கள் தங்களது மாவட்ட, ஒன்றியச் செயலாளர்களை அழைத்து வந்திருந்தனர். இந்தப் பகுதியில்தான் அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் படு தோல்வியைச் சந்தித்திருந்தது. இத்தனைக்கும் இந்தப் பகுதியில் காமராஜ், ஓ.எஸ். மணியன், துரைக்கண்ணு மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

இவ்வளவு பேர் ‘பவரில்’ இருந்தும் உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக அதிக இடங்களைப் பறிகொடுத்தது. இதுகுறித்துப் பேசி நிர்வாகிகளை அப்செட் ஆக்க வேண்டாம் என்று எண்ணி இன்றைய கூட்டத்தில் ‘உற்சாக டானிக்’ மட்டுமே நிர்வாகிகளுக்குத் தரப்பட்டது. மேலும், தங்கள் பகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் நடந்தது இருக்கட்டும், இனி நடக்கப் போவதைக் கவனியுங்கள் என்று எடப்பாடி கறாராகக் கூறி விட்டாராம்.

விரைவில், நகர்ப்புறப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ளது. ஊரகப் பகுதியில் தான் கோட்டை விட்டோம், நகர்ப்புறத் தேர்தலில் வெற்றி நமதாக இருக்க வேண்டும். அதனால், கட்சிப் பணி ஆற்றுங்கள் என்றும், திமுக குறைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறுங்கள் என்றும் அட்வைஸ் செய்து அனுப்பியுள்ளனர்.

மேலும், விடுபட்ட 9 மாவட்டத் தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |