YES வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் பணம் குறித்து அச்சப்படத் தேவையில்லை என பாரத் ஸ்டேட் பேங்க் தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
திவாலாகும் நிலைக்கு சென்று விட்ட YES வங்கி நிர்வாகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள ரிசர்வ் வங்கி மறு உத்தரவு வரும் வரை வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்பு தொகையில் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது. இந்த நிலைமை அடுத்த மாதம் 1-ஆம் தேதிக்குள் சரி செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் YES வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களது பணம் குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் , சேமிப்பு பணம் பத்திரமாக இருக்கும் என்றும் பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார். YES வங்கியில் மொத்தமாக 2,450 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வங்கியில் 49 சதவீத பங்குகளை பாரத ஸ்டேட் வங்கி வாங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.