அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்றைய ஆட்சியாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு. 11/07/2022 அன்று கழகப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று இருக்கின்ற அந்த சமயத்தில், ஒரு சிலர் கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, பிரதான கேட்டை உடைத்து, தலைமைக் கழகத்தில் இருக்கின்ற கதவுகளை உடைத்து,
உள்ளே புகுந்து அறையினுடைய கதவுகளை எல்லாம் உடைத்து, அறைக்குள் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களை எல்லாம் சேதப்படுத்தி, அந்த பொருட்களை எல்லாம் வெளியே எடுத்து வந்து, தீயை வைத்துக் கொளுத்தி, பல்வேறு பொருட்கள் கொள்ளையடித்துச் சென்று இருக்கிறார்கள். கழகத்திற்கு சொந்தமான இடத்தினுடைய பத்திரங்கள் எல்லாம் தலைமைக் கழகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது. அதையும் திருடி சென்றிருக்கிறார்கள்.
அதோடு தலைமைக் கழகத்திலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தி இருக்கிறார்கள். இப்படி வேண்டுமென்றே திட்டமிட்டு, கட்சிக்கு களங்கம் விளைகின்ற விதத்தில் செயல்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்திற்கு புகார் செய்யப்பட்டும், இந்த விடியா திமுக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதோடு நாங்கள் நீதிமன்றம் சென்றோம், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது, விரைவாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று. அப்பொழுதும் கிடப்பிலே போட்டார்கள். மீண்டும் நீதிமன்றம் சென்றோம், அப்போது தான் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என்று நீதிமன்றத்திலே தெரிவிக்கப்பட்டு, அதன்படி நேற்றைய தினம் தான் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் வந்து தடயங்களை எல்லாம் சேகரித்து சென்று இருக்கிறார்கள்.
32 ஆண்டுகள் ஆண்டு ஆட்சி செய்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி, பிரதான எதிர்க்கட்சி தமிழகத்திலே.. எங்களுடைய கட்சியின் அலுவலகம் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டு, பொருட்கள் திருடப்பட்டதற்கு நாங்கள் புகார் கொடுத்தும், எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்த திராவிட முன்னேற்றக் கழக விடியா அரசின் சட்ட ஒழுங்கு எவ்வளவு சீர்குலைந்து இருக்கிறது என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும்.
அனைதிந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரைக்கும் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் காலத்திலும் சோதனை ஏற்பட்டது. இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா காலத்திலும் சோதனை ஏற்பட்டது. அம்மா மறைவுக்கு பிறகும் சோதனை ஏற்பட்டது. எப்போதெல்லாம் சோதனை ஏற்படுகிறதோ,
அப்பதெல்லாம் தொண்டர்களோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அந்த சோதனைகளை வென்று, சாதனை படைத்தது. ஆகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் ஒருங்கிணைந்து, மீண்டும் அம்மாவுடைய அரசு அமைப்போம், அதுதான் நம்முடைய சபதம், லட்சியம் என தெரிவித்தார்.