இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பவுலிங்கில் பலம் வாய்ந்த 3 அணிகளை பற்றி பார்ப்போம்..
ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடர் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது.. இதற்காக அனைத்து அணிகளும் மிக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.. இந்த முறை ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் நடப்பதால் பந்துவீச்சில் எந்த அணி பலமாக இருக்கிறதோ அந்த அணி கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.. ஆகவே பந்துவீச்சில் பலமாக உள்ள 3 அணிகளை பற்றி பார்ப்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் :
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பார்ப்பதற்கு யாருமே இல்லாதது போன்று தான் இருக்கும்.. ஆனால் அந்த அணியில் கடந்த முறை சிறப்பாக பந்து வீசிய இளம் பந்துவீச்சாளர்களான தீபக் சஹார், ஷர்துல் தாகூர் ஆகியோர் இருக்கின்றனர்.. அதுமட்டுமில்லாமல் கடைசி கட்டத்தில் துல்லியமாக பந்துவீசி எதிரணிகளை திணறடிக்கும் பிராவோவும் இருக்கிறார்.. அதையும் தாண்டி பார்த்தால் தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி இங்கிடி சென்னை அணிக்கு திரும்பி இருப்பதால் அவர் வேகத்தில் மிரட்டுவார் என்பதில் சந்தேகமில்லை..
மேலும் சுழற்பந்துவீச்சில் இம்ரான் தாஹிர், கரண் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர் ஆகிய அனுபவமும் திறமையும் வாய்ந்த பவுலர்கள் இருக்கின்றனர்.. ஆகவே இந்த வருடம் சென்னை அணி பந்துவீச்சாளர்கள் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சிம்ம சொப்பனமாக விளங்குவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..
டெல்லி கேப்பிடல்ஸ் :
டெல்லி கேபிட்டல்ஸ் இந்த முறை கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து சொல்லி வருகின்றனர்.. ஏனென்றால் இந்த அணியும் சமமான அளவில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என சிறப்பாகவே இருக்கின்றது.. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கடந்த ஆண்டில் தனது வேகத்தால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்த காகிசோ ரபாடா மிகவும் முக்கியமான வீரராக பார்க்கப்படுகிறார்..
அதேபோல இசாந்த் சர்மா, மோஹித் சர்மா போன்ற வீரர்களும் அணியில் இருக்கின்றனர்.. சுழல் பந்துவீச்சை பார்த்தோமென்றால் அமித் மிஸ்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இருக்கின்றனர்.. சரியான கலவையில் சுழல் பந்து வீச்சாளர்களும் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர்.. ஆகவே இந்த அணி பவுலிங்கில் நல்ல பலம்வாய்ந்ததாக இருக்கிறது..
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :
ஐபிஎல்லில் மற்ற அணிகள் எல்லாம் பெரும்பாலும் பேட்டிங்கை வைத்துதான் தொடரில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும்.. ஆனால் இந்த அணியை பொறுத்தவரை பந்துவீச்சை மட்டுமே நம்பி கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வருகிறது.. ஆம், அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், கலீல் அஹமத், சந்தீப் சர்மா, பாஸில் தம்பி என பலர் இருக்கின்றனர்.. அதையும் தாண்டி பார்த்தால் சுழல் பந்து வீச்சில் ரசீத் கான், சபாஷ் நதிம், முகமது நபி ஆகிய வீரர்களும் இருக்கின்றனர்..
மேலும் இரண்டு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல்லிலும் இந்த அணி அனுபவம் வாய்ந்த பவுலர்களை வைத்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..