அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரத்தனசபாபதிக்கு முதல்வரை சந்திக்க அனுமதி வழங்காதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் அமமுக ஆதரவில் இருந்து அதிமுக ஆதரவாளரான அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் இன்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது அங்கு இருக்கக்கூடிய விஐபி காண ஓய்வறையில் இருந்த முதல்வரை சந்திப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் காத்திருந்தனர். அனைவருக்கும் முதல்வரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்ன சபாபதிக்கு அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் ரத்தன சபாபதி கூறுகையில், முதல்வரை சந்திக்க எனக்கு அனுமதி கொடுக்கவில்லை. அங்கு மத்திய அரசு ஊழியர்கள் இருந்தார்கள் அவர்கள் இந்தியில் பேசினார்கள். நாங்க உள்ளே செல்ல வேண்டும் என்ற போது எங்களை தடுத்தார்கள், காலையிலும் மறுப்பு தெரிவித்தனர். விமான நிலையத்தில் என்னை மட்டும் தடுத்தார்கள் என்று கூறினார்.
மேலும் எதற்கு எனக்கு அனுமதி வழங்கவில்லை என்று தெரியவில்லை. அனுமதி மறுக்கப்பட்டு ஒரு மணி நேரம் ஏர்போட்டின் வெளியே நின்றேன். முதல்வரிடம் என்னுடைய மனக்கவலையை தெரியப்படுத்தினேன். இன்று முழுவதும் நான் அவருடைய நிகழ்ச்சியில் தான் இருந்தேன. எங்க மாவட்டத்திற்கு முதல்வர் விருந்தினராக வந்துள்ளார். அவரிடம் போய் காலையிலேயே உள்ளே விடவில்லை, வைக்கவில்லை என்று குறை சொல்லிக்கொண்டு இருக்கக்கூடாது என நினைக்கின்றேன்.
முதல்வரிடம் விரைவில் இது பற்றி பேசுவேன். மற்ற எம்எல்ஏக்களை அனுமதித்த நிலையில் தன்னை சந்திக்க அனுமதிக்காததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இன்று முழுவதும் முதலமைச்சரோடு தான் சுற்றிக் கொண்டே இருக்கின்றேன். அவரை அனுப்பி விடத்தான் இங்கே வந்தேன். என்க மாவட்டத்துக்கு வந்து நிறைய திட்டங்களை அறிவித்ததற்கு நன்றி சொல்ல தான் உள்ளே செல்ல நினைத்தேன் ஆனால் அனுமதிக்கவில்லை என சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.