ஹைதி அரசு அமெரிக்கா மற்றும் ஐ.நா. அமைப்பிடம் நாட்டில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில் ஹைதிக்கு படைகளை அனுப்புமாறு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
கடந்த புதன்கிழமை அன்று ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவரது மனைவி மார்டின் மோயிஸ்-க்கு அந்த சம்பவத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. இதையடுத்து அதிபரின் மனைவி மார்டின் மோயிஸ் புளோரிடாவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் ஹைதி நாட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கிடையே அந்த நாட்டு பாதுகாப்பு படையினர் சந்தேகத்தின் பேரில் 4 பேரை சுட்டு கொலை செய்துள்ளனர். இந்த நிலையில் அந்நாட்டு காவல்துறை உயரதிகாரி லியோன் சார்லஸ் ஹைதி அதிபர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 28 பேர் கொண்ட குழு செயல்பட்டதாகவும், இரண்டு பேர் ஹைதி தீவை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றும், 26 பேர் கொலம்பியாவை சேர்ந்தவர்கள் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் இரண்டு அமெரிக்கர்கள், 15 கொலம்பியர்கள் என மொத்தம் 17 பேர் இதுவரை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் பாதுகாப்பு படையினர் 3 கொலம்பியர்களை சுட்டு தள்ளியுள்ளனர். மேலும் 8 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே காவல்துறை மற்றும் ராணுவத்தின் கட்டுப்பாட்டை தனக்கு கீழ் கொண்டு வந்துள்ளதாக இடைக்கால பிரதமரான ஹிலோடி ஜோசப் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஹைதி நாட்டின் புதிய பிரதமராக அதிபர் ஜோவனல் மோயிஸ் தான் இறப்பதற்கு முன்னதாக ஏரியல் ஹென்றி என்பவரை அறிவித்திருந்தார். மேலும் இந்த வாரம் புதிய பிரதமராக ஏரியல் பதவி ஏற்க இருந்த நிலையிலேயே அதிபர் ஜோவனல் மோயிஸ் கொலை செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக அதிகாரம் யார் கைக்கு செல்லும் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டு பதவியேற்க இருந்த ஏரியல் என்பவருக்கும், இடைக்கால பிரதமராக உள்ள ஹிலோடி ஜோசப்-க்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் பிரதமர் பதவி தனக்கு தான் என்று சொந்தம் கொண்டாடுவதால் அரசியல் குழப்பமானது ஹைதி நாட்டில் நீடித்து வருகிறது.
மேலும் நாட்டில் பதற்றமான சூழ்நிலையில் வன்முறையும், போராட்டங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஹைதி அரசு மக்களிடையே ஏற்பட்டுள்ள கிளர்ச்சி மற்றும் அதிபர் கொல்லப்பட்டுள்ளதாக ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் வகையில் படைகளை அனுப்புமாறு அமெரிக்கா மற்றும் ஐ.நா. அமைப்புக்கு கோரிக்கை விடுத்தது. கடந்த 7-ஆம் தேதி ஹைதி பிரதமர் அலுவலகம் இந்த கோரிக்கையை அமெரிக்கா மற்றும் ஐ.நா. அமைப்புக்கு கடிதம் மூலம் அனுப்பியுள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் ஐ.நா. அமைப்பு நாட்டில் பாதுகாப்பை நிலைநிறுத்த படைகளை அனுப்பி உதவுமாறு ஹைதி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையடுத்து அமெரிக்கா ஹைதி அரசு அனுப்பிய கடிதத்தை நிராகரிப்பு செய்ததோடு படையை அனுப்புவதற்கான அவசியம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. இருப்பினும் அமெரிக்கா ஹைதி நாட்டிற்கு உள்துறை அமைச்சகம் மற்றும் அதிபர் கொலை தொடர்பாக விசாரணைக்கு எஃப்பிஐ அதிகாரிகளை அனுப்பியுள்ளது. அதேசமயம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள 15 நாடுகள் ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே நாட்டிற்கு ஐ.நா. அமைதிப்படையை அனுப்ப முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.