திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. காணொளி காட்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி, வீரமணி உள்ளிட்ட 11 கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
அதிமுக – பாஜகவை சாடிய தீர்மானம்:
இதில் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் அகில இந்தியத் தொகுப்பில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில், மாநில அரசுகள் கடைபிடிக்கும் இடஒதுக்கீடு விகிதாசாரப்படி மருத்துவ இடங்களை ஒதுக்கீடு செய்திடுக என்ற தீர்மானத்தில் மத்திய பாஜக அரசையும், மாநில அதிமுக அரசையும் கடுமையாக சாடியுள்ளார்.
மத்திய அரசுக்கு கண்டனம்:
“நீட்” தேர்வை வலுக்கட்டாயமாகத் தமிழகத்தின் மீது திணித்து, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வியை எட்டாக் கனியாக்கியுள்ள மத்திய பா.ஜ.க. அரசு, தற்போது மாநிலங்கள் மத்திய தொகுப்பிற்கு வழங்கும் 50 சதவீத முதுநிலை, 15 சதவீத இளநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களிலும், சமூக நீதியைத் தட்டிப் பறித்து, சமூக அநீதியை உருவாக்கிடும் விதமாக – கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர்க்கான 50 சதவீத இடஒதுக்கீட்டைச் உள்நோக்கத்துடன் மறுத்துவரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
குறைபாடில்லாமல் செயல்படுத்துங்க:
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மத்திய தொகுப்பிற்கு (ALL INDIA QUOTA) தமிழக அரசு ஒப்படைக்கும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில், பிற்படுத்தப்பட்டோர் – மிகப் பிற்படுத்தப்பட்டோர்க்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை, எந்தவிதக் குறைப்பாடும் இன்றி, மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகச் செயல்படுத்திட வேண்டும். இடஒதுக்கீட்டை பொறுத்தவரை, மாநில அரசுகள் ஏற்கனவே கடைபிடித்து வரும் சதவீதப்படி, மருத்துவ இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதுபோலவே பட்டியிலின மற்றும் பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீட்டையும் மாநில அரசுகள் வழங்கும் விகிதசாரப்படி, இடஒதுக்கீடு பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
பாஜகவுக்கு எச்சரிக்கை:
“கடிதம் எழுதுகிறோம்” “கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று “நீட் தேர்வு விவகாரத்தில்” தமிழக மாணவர்களை காலை வாரியது போல் அதிமுக அரசு இதிலும்“விபரீத விளையாட்டு” நடத்தாமல் மத்திய பா.ஜ.க அரசுக்கு அழுத்தம் கொடுத்து இட ஒதுக்கீட்டை பெற்றிட வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு சட்டப் போராட்டத்தினை ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடங்கியுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளையும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களையும் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்திடும் சூழலை மத்திய பா.ஜ.க. அரசு ஏற்படுத்திட வேண்டாம் என்று இக்கூட்டம் எச்சரிக்கிறது.
அதிமுகவை விமர்சித்த திமுக:
தமிழகத்தை பொறுத்தவரை எதிர்க் கட்சிகள் மத்திய அரசை எதிர்க்கும் ஒவ்வொரு திட்டங்களுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதுவார். அதேபோல தமிழகத்தை பாதிக்கும் குறிப்பிட்ட விஷயங்கள் வேண்டாமென்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினால் ஆளும் அதிமுக அரசு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் இதனை விமர்சித்தே தற்போது திமுக தலைமையிலான கூட்டணியில் கண்டன அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.