எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6.7 விழுக்காட்டில் இருந்து 6.9 விழுக்காடாக உயர்த்தியுள்ளது. மேலும் இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, 700க்கு மேல் சிபில் ஸ்கோர் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடன் வட்டி விகிதமானது 0.20% உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த புதிய வட்டி விகிதமானது, நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சிபில் ஸ்கோர் 700க்கும் குறைவாக இருப்பவர்களுக்கு ,அதிகபட்சமாக 0.25% வரை வட்டி உயர்த்தப்படும் எனவும் இதுவரை கடனே வாங்காத வாடிக்கையாளர்களுக்கு 0.40% வட்டி உயர்த்தப்படும் என்று எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது பணவீக்கமானது கடுமையாக உயர்ந்து வரும் சூழலில், கடந்த வாரம் ரிசர்வ் வங்கி அவசர ஆலோசனையை நடத்தியுள்ளது. அப்போது ரெப்போ வட்டி விகிதத்தை 4.40% ஆக உயர்த்தியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதையடுத்து பல்வேறு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன.
இதையடுத்து ஏற்கெனவே எச்டிஎஃப்சி வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா போன்ற பல்வேறு வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால், ஏற்கெனவே EMI செலுத்தி வருவோர் மற்றும் புதிதாக கடன் வாங்குவோருக்கு மேலும் செலவு அதிகரிக்கும். இவ்வாறு இந்த அறிவிப்பினால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.