வாலிபரை வெட்டிக் கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் எல்லப்பன் என்பவருக்கும் நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது குறித்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. அதன்பின் 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் எல்லப்பன் தான் கையில் வைத்திருந்த சூரி கத்தியால் வெங்கடேசனை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.
இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் எல்லப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனை அடுத்து இந்த விசாரணை இம்மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது இந்த வழக்கில் ராணிப்பேட்டை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தீர்ப்பு வழங்கியுள்ளார். இதில் எல்லப்பனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவு வழங்கியுள்ளார்.