சிக்கனை வைத்து ஒரு அருமையான சுவையில் சிக்கன் ஷவர்மா. இதை செய்ய நேரம் குறைவாக எடுத்து கொண்டாலும் அதன் சுவையோ அட்டகாசமாக இருக்கும். அதனை திரும்ப திரும்ப செய்து சாப்பிட தூண்டும் அளவிற்கு இருக்கும். இப்போது நம் எல்லோருக்கும் பிடித்த சிக்கன் ஷவர்மா எப்படி செய்வதென்று இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
மைதா – 3 கப்
பூண்டு – 2
தயிர் – 4 தேக்கரண்டி
புதினா – சிறிதளவு
எலுமிச்சம் பழம் – 2
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரகத் தூள் – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மயோனைஸ் – 1/2 கப்
ஈஸ்ட் – 2 தேக்கரண்டி
சர்க்கரை – 1 தேக்கரண்டி
கேரட் – 1
வெள்ளரிக்காய் – 1
குடை மிளகாய் – 1
செய்முறை:
முதலில் வெளியில் உள்ள பிரட்டை தயார் செய்து விடலாம். அதற்கு ஒரு கப்( 250 ml) வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் இரண்டு தேக்கரண்டி ஈஸ்ட் சேர்த்து 5 நிமிடம் வரை அப்படியே இருக்க வேண்டும்.
பின் ஒரு பவுலில் மூன்று கப் மைதா அல்லது கோதுமை மாவு எடுத்து, அதனுடன் தேவையான அளவு உப்பு, இரண்டு தேக்கரண்டி எண்ணெய், ஈஸ்ட், தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் வரை நன்றாக இழுத்து பிசையவும்.
பின்னர் மாவின் மேல் பகுதி முழுவதுமாக எண்ணெய் தடவி 1-2 மணி நேரம் புளிக்க வைக்கவும். அதனை அடுத்து மாவானது இரண்டு மடங்காக பெரியதாகி இருக்கும். பின்னர் அதனை உருண்டைகளாக பிடித்து சப்பாத்தி கட்டையால் தேய்த்து கொள்ளவும்.
பின் குறைவான சூட்டில் அதனை தோசைக் கல்லில் போட்டு எடுத்து ஒரு துணியால் மூடி தனியே வைக்கவும். பின் காய்கறி சாலட்டை தயார் செய்து கொள்ளவும். அதற்கு 1 கேரட், 1 வெள்ளரிக்காய், 1 பச்சை குடை மிளகாய், புதினா தழை சிறிது சேர்த்து கலந்து கொள்ளவும். காய்கறிகளை நீட்டு வாக்கில் அரிந்து, அதனோடு எலுமிச்சம் பழச்சாறு, தேவையான அளவு உப்பு, சிறிதளவு மிளகு சேர்த்து கிளறி விடவும்.
அடுத்ததாக அரை கிலோ எலும்பு இல்லாத சிக்கனை எடுத்து, அதனோடு 4 தேக்கரண்டி தயிர், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி சீரகத் தூள், 2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, சிறிதளவு மிளகு சேர்த்து நன்றாக கிளறி 1/2 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
பின்பு ஒரு கடாயில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, அதில் ஊறிய சிக்கனை போட்டு பொரித்து எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். பிறகு 1/2 கப் மயோனைஸ் எடுத்து, அதில் 2 பூண்டை துருவியோ அல்லது பேஸ்டாகவோ சேர்த்து, சிறிதளவு மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின் நாம் தயார் செய்து வைத்த பிரட்டை எடுத்து, அதில் மயோனைஸை தடவி, சிறுது சிக்கனை வைத்து, அதன் மேல் காய்கறிகள், பெரிய வெங்காயத்தை சேர்க்கவும். அதன் மேல் மறுபடியும் சிறிதளவு மயோனைஸை தடவி கொள்ளவும்.
இதனை ரோல் செய்து டூத் பிக் வைத்து குத்தி வைத்தால், சுவையான சிக்கன் ஷவர்மா தயார்.