Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்து நிறைந்த கேழ்வரகுகளில்… குழந்தைகள் அதிகம் விரும்பும்… ஒரு ருசியான ரெசிபி செய்யலாம்..!!

கேழ்வரகு இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு          – 1 கப்
அரிசி மாவு                   – ¼கப்
உப்பு                                 – தேவையான அளவு
நீர்                                     – 2 கப்
நல்லெண்ணெய்      – 1 தேக்கரண்டி

செய்முறை :

முதலில் அடுப்பில் ஒரு அகலமான வாணலியை வைத்து நன்கு சூடானதும், அதில் கேழ்வரகு மாவை போட்டு பச்சை வாசனை போகும் வரை சில நிமிடம் நன்கு வறுத்து எடுத்து கொள்ளவும்.

பின்பு அதே வாணலியில் அரிசி மாவையும் போட்டு பச்சை வாசனை போகும் வரை வறுத்து, அதனுடன் சிறிது உப்பு, வறுத்து வைத்த கேழ்வரகு மாவையும் போட்டு நன்கு கலந்து கொள்ளவும். மேலும் அடுப்பில் பாத்திரத்தை வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.

மேலும் தண்ணீர் நன்கு கொதித்ததும் இறக்கி வைத்தபின், அந்த தண்ணீரை கலந்து வைத்த மாவு கலவையில் ஊற்றி இடியாப்ப மாவு பதத்தில் நன்கு கெட்டியாக பிசைந்து, அப்படியே 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு முடி வைத்த கலவையில், சிறிது எண்ணெய் ஊற்றி மறுபடியும்  நன்கு பிசைந்து கொள்ளவும்.

பின்னர் இட்லி பாத்திரத்தில் உள்ள தட்டுகளை எடுத்து, அதில் சிறிது எண்ணெயை ஊற்றி தடவியபின், இடியாப்பம் அச்சை எடுத்து, அதில் பிசைந்த மாவை வைத்து, எண்ணெய்யை தடவிய இட்லி தட்டில், மாவு வைத்த அச்சை இடியாப்பமாக பிழிந்து கொள்ளவும்.

அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து, அதில் தேவையான தண்ணீர் ஊற்றி, அதில் தட்டில் இடியப்பாமாக பிழிந்த மாவு கலவையை வைத்து அதன் முடி வைத்து நன்கு வேக வைக்கவும். இடியப்பம் வெந்ததும் அதனை இறக்கி ஆற வைத்து, பரிமாறினால் சத்து நிறைந்த கேழ்வரகு இடியாப்பம் ரெடி.

Categories

Tech |