புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த தவளக்குப்பம் அருகே மின்னல் தாக்கியதில் கோவில் கோபுரம் சேதமடைந்ததால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
புதுச்சேரி மாநிலம் தவளைகுப்பம் அடுத்த பெரிய காட்டு பாளையம் பகுதியில் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சீரமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக 1.50 கோடி மதிப்பீட்டில் கோவில் பணி நடைபெற்று வந்தது. இன்னும் சில மாதங்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் திடீரென்று நேற்று முன்தினம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அப்போது மின்னல் தாக்கி ராஜகோபுரத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. நேற்று காலை கோவிலுக்குள் வந்து பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இந்து அறநிலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது. இதுகுறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் ஏற்பட்ட சேதங்களை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.