இந்திய ரயில்வேயினுடைய 3 கோடி பயனர்களின் தரவுகள் ஆன்லைனில் கசிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஹேக்கர் ஒருவர் டேட்டாவை டார்க் வெப்பில் விற்பனைக்கு வைத்துள்ளார் எனவும் கோடிக்கணக்கான பயனர்களின் மின் அஞ்சல், மொபைல் எண், முகவரி, வயது விபரங்களை ஹேக்கர்கள் பெற்றுள்ளதாகவும் டைம்ஸ் நவ் அறிக்கையில் வெளியிடப்பட்டு உள்ளது. இதனிடையில் தற்போது வெளியாகிய செய்திகளின் அடிப்படையில், இந்த டேட்டா லீக் பற்றி ரயில்வே தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
எனினும் ரயில்வே வாரியம் CERT-Inக்கு எச்சரிக்கை அனுப்பி இருக்கிறது. விசாரணைக்கு பின், டார்க் வெப்பில் கிடைக்கக்கூடிய கசிந்த தரவுகளின் மாதிரியானது IRCTC-ன் API வரலாற்றுடன் பொருந்தவில்லை என கண்டறியப்பட்டது. அத்தகைய நிலையில், இது IRCTC சர்வரிலிருந்து கசியவில்லை. இது தொடர்பாக IRCTCன் வணிக கூட்டாளிகள் விசாரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.