கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் இங்கிலாந்து நாட்டில் இதுவரை 11,658 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 578 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என அனைவரும் அயராது தங்கள் வேலையே செய்து வருகின்றனர். இந்நிலையில், அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைக்காக இரவு பகலாக பணி செய்துவரும் சுகாதாரத் துறைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக மக்கள் அனைவரும் அவர்களைக் கைத்தட்டி உற்சாகப்படுத்தும் முன்னெடுப்பு நேற்று நடைபெற்றது. அனைவரும் அவர்களுக்காக கைதட்டி நன்றி தெரிவித்தனர்.
முன்னதாக இந்தியாவில் கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற மக்கள் ஊரடங்கின்போது நாட்டு மக்கள் மாலை 5 மணியளவில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு கைத்தட்டியும், வீட்டில் உள்ள தட்டு, பாத்திரம் உள்ளிட்ட பொருட்களின் மூலம் சத்தம் எழுப்பியும் நன்றி தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்ற நடவடிக்கையை தான் நேற்று மாலை இங்கிலாந்திலும் மேற்கொள்ள வேண்டும் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கோரிக்கைவைத்தார். அதன்படி, நேற்று மாலை லண்டன் நகரின் முக்கியப் பகுதிகளில் நீல வண்ண மின்விளக்குகள் ஏற்றப்பட்டு, தேசிய சுகாதார ஊழியர்களுக்கு கைதட்டி நன்றி தெரிவிக்கப்பட்டது.