டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும், சமூக விலகல் பின்பற்றப்படும், பாதுகாப்பும் வழங்கப்படும் எனவும் கொரோனா முடிய நாளாகும் என்பதால் மற்ற கடைகளை போல மதுக்கடைகளும் திறக்கப்படுகிறது என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மது மொத்த விற்பனை செய்யப்படாது, தனிநபர்களுக்கு தான் விற்கப்படும் என உறுதிபட தெரிவித்துள்ளது. இதையடுத்து, டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரிய மனுக்கள் மீது இன்று மாலை 5 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதி நீட்டித்த மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகள் சில தளர்வுகளை வழங்க அனுமது அளித்தது. இதையடுத்து மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவும் நிலையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் , டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் விற்க முடியுமா? மதுபானங்களை வீடுகளுக்கு நேரடியாக சென்று டெலிவரி செய்ய முடியுமா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்றே பதிலளிக்க உத்தரவிட்டது. டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.