ஒன்றரை வயது ஆண் குழந்தை வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள மாளிகை கோட்டை பகுதியில் மணிவண்ணன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரணியன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த குழந்தையின் பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதனையடுத்து பெண்ணாடம் காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புகார் அளித்தனர்.
அதன் பின் அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் விசாரித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்காலில் தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் ஒருவேளை குழந்தையானது தண்ணீரில் விழுந்து இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. எனவே போலீசார் திட்டகுடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வாய்க்கால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தையை தேடியும், குழந்தை கிடைக்கவில்லை.
இதனையடுத்து விருதாச்சலம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் தலைமையில் அந்த குழந்தையை கண்டுபிடிப்பதற்காக 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் வெலிங்டன் பாசன கால்வாயில் குழந்தை இரணியனின் உடலானது மிதந்தது. இதனையடுத்து வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த இரணியன் வாய்க்காலில் தவறி விழுந்ததும், கால்வாயில் அதிகளவு தண்ணீர் இருந்ததால் குழந்தை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது. அதன் பின் குழந்தையின் உடலை மீட்டு போலீசார் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஒன்றரை வயது ஆண்குழந்தை இறந்த சம்பவம் அவன் பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.