சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது வேன் மோதிய விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலை மற்றும் பிற விவசாய தொழில்களில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அங்கு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பகவான்தேவ் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு வயது மகன் ரஞ்சித் ஆகியோருடன் கோட்டூர் வஞ்சிபுரத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை நாளில் பகவான்தேவ் வீட்டில் இருந்தபோது, அவரது மனைவி காய்கறி வாங்க கடைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ரஞ்சித் அறியாமல் சாலைக்கு வந்து விட்டான்.
அந்த சமயம் அவ்வழியாக வந்த வேன் ஒன்று எதிர்பாராவிதமாக சிறுவனின் மீது மோதி விட்டது. இதனையடுத்து படுகாயமடைந்த சிறுவனை அவரது பெற்றோர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிறுவனை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் ரஞ்சித் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 2 வயது மகன் உயிரிழந்ததை பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த விபத்துக்கு காரணமான அந்த வேனை ஓட்டி வந்த பீகாரை சேர்ந்த ராஜ்மதி என்பவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.