தூத்துக்குடி மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதிக்குட்பட்ட தென்திருப்பேரை கோட்டூர் தெருவை சேர்ந்தவர் தாஸ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி மாவட்ட வர்த்தக அணி செயலாளராக இருந்து வருகிறார். இன்று காலை 6 மணி அளவில் தென்கரையிலுள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், கையில் வைத்திருந்த அரிவாளைக் கொண்டு தாஸை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சாய்ந்து விழுந்தத தாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அறிந்து பதறிய தாஸின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளி பயன்படுத்தி விட்டு சென்ற இரு சக்கர வாகனத்திற்கு தீ வைத்து கொளுத்தினர்.இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையிலான காவல்துறையினர் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்த தாஸின் உடலை உடற்கூறு உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினருக்கு வயலில் ஆடு மேய்ப்பது தொடர்பாக எழுந்த தகராறில் கொலை நடந்துள்ளது என தெரிய வந்திருக்கிறது. தாசை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த மாரி என்பவரின் மகன் இசக்கி(21) என தெரிவித்த காவல்துறையினர், கொலைக்கான காரணம் வேறு ஏதும் உண்டா ? என்று விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.