தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அங்கன்வாடி பள்ளிகளில் நடைபெறும் கிண்டர் கார்டன் வகுப்புகளை தொடர்ந்து நடத்துவதற்கான அறிவிப்பு மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன் பிறகு வகுப்புகளை நடத்துவதற்கு மாதம் 5000 தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளி வளாகங்களில் நடைபெற்று வரும் 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைகளை பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் காணொளி காட்சி மூலமாக வழங்கினார்.
இதனையடுத்து தற்போது வகுப்புகளை நடத்துவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி 2381 அங்கன்வாடி மையங்களிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்துவதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு தொடக்க கல்வி பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்ற அல்லது இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் செயல்படும் தன்னார்வலர்களை தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கலாம்.
ஒருவேளை கிடைக்காத பட்சத்தில் வெளியிலிருந்து தகுதியான ஒருவரை தேர்வு செய்து கொள்ளலாம். அதோடு தேர்வு செய்யப்படும் சிறப்பு ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சிகள் கொடுக்கப்படும். தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு பணிக் காலம் 11 மாதங்கள் மட்டுமே. மேலும் தகுதியான ஆசிரியர்களை பள்ளியின் மேலாண்மை குழு தேர்வு செய்து அக்டோபர் 14-ம் தேதிக்குள் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.