லோடு ஆட்டோ மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீலாத்திகுளம் கிராமத்தில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பிரேமா அதே பகுதியில் வசிக்கும் கல்யாணி, காளீஸ்வரி, ஜோதி ஆகியோருடன் தனது வீட்டின் முன்பாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு திருமண வீட்டில் சீர்வரிசை பொருட்களை இறக்கி வைத்துவிட்டு லோடு ஆட்டோ ஒன்று திரும்பி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அங்கு பேசிக் கொண்டிருந்த பிரேமா உள்ளிட்ட 4 பேர் மீதும் எதிர்பாராதவிதமாக அந்த லோடு ஆட்டோ மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பிரேமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கல்யாணி, காளீஸ்வரி, ஜோதி ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் அவர்கள் 3 பேரையும் உடனடியாக மீட்டு ராதாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பின் காளீஸ்வரியை மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் சீலாத்திகுளம் சாலையில் விபத்தை ஏற்படுத்திய லோடு ஆட்டோ டிரைவரை கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த ராதாபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லோடு ஆட்டோ டிரைவரான மகேந்திரபுரம் பகுதியில் வசிக்கும் குமாரை கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.