லோடு ஆட்டோ-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பொட்டல் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயச்சந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயச்சந்திரன் மோட்டார் சைக்கிளில் நெல்லையில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ஜெயச்சந்திரன் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தனது ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது புதூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக ஆலங்குளத்தில் இருந்து நெல்லை நோக்கி மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு லோடு ஆட்டோ வந்துள்ளது.
இந்நிலையில் லோடு ஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ஜெயச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து சீதபற்பநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜெயச்சந்திரனின் உடலை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் லோடு ஆட்டோ ஓட்டி வந்த ஆலங்குளம் பகுதியில் வசிக்கும் வேல்முருகன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.