உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு மறுவரையறையை முழுமையாக முடிக்காமல் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த முயற்சிப்பதாகவும், அதை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரியும் திமுக, செ.கு. தமிழரசன் உள்ளிட்ட 12 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது.
அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி போப்டே, வழக்கின் தீர்ப்பு இன்று (டிச. 6) காலை 10.30 மணியளவில் வழங்கப்படும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஊரக உள்ளாட்சி பகுதிகளில் தேர்தலை நடத்த தடையில்லை எனவும் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது.
திமுக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியிருப்பதையடுத்து, உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.