சத்தீஸ்கர் மாநிலத்தில் மேலும் 3 மாதங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவோடு 3ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், மே 31 ம் தேதி வரை மேலும் ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.
மேலும் 4-ம் கட்ட ஊரடங்கிற்கான வழிகாட்டுநெறிமுறைகளை மத்திய அரசின் உள் துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில், ” பொது இடங்களிலும் பணி இடங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயம். ஹோட்டல்கள் மது பான கூடங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு அரங்கை திறக்க அனுமதிக்கப்படுகிறது.
திருமண விழாக்களில் அதிகபட்சம் 50 பேர் வரையில் பங்கேற்கலாம். இறுதி சடங்கில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம்” என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டிருந்தது. மேலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநிலத்தில் 144 தடை அடுத்த 3 மாதங்களுக்கு தொடரும் எனவும், இது அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
தடை உத்தரவுகளை மீறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் சத்தீஸ்கர் மாநிலத்தில் 25 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. அதில் இதுவரை 59 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது, 33 பேர் சிகிச்சையில் உள்ளனர்.