லண்டன் சட்டமன்ற உறுப்பினர்கள் “தமிழ் பாரம்பரிய மாதமாக” ஜனவரி மாதத்தை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல வல்லரசு நாடுகளிலும் தொழில்நுட்பம், அரசியல், பொருளாதாரம் என பல துறைகளில் தமிழர்கள் தங்களது ஆதிக்கத்தினை செலுத்தி வருகின்றனர். மேலும் வெளிநாட்டில் வாழ்ந்து வரும் தமிழர்கள் அங்கு நிலவும் அரசியல் சூழல்களை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக விளங்குகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டாலும் தமிழ் பண்டிகைகள் மற்றும் தமிழ் கலாச்சாரத்தை உலகம் அறியும் வகையில் கொண்டு சேர்க்கின்றனர்.
அதன்படி தமிழர்கள் இங்கிலாந்தில் அரசியல் கட்டமைப்புக்கு ஆற்றிய பங்களிப்பினை சிறப்பிக்கும் விதமாக லண்டன் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் “தமிழ் பாரம்பரிய மாதமாக” ஜனவரி மாதத்தை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும் எதிர்கட்சி மற்றும் ஆளும்கட்சி உறுப்பினர்கள் இதுகுறித்து முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் நிகோலஸ் ரோஜர்ஸ் இது தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார். பின்னர் சட்டமன்றத்தில் உரையாற்றிய நிகோலஸ் தமிழர்கள் இங்கிலாந்தின் பொருளாதாரம், கலாச்சாரம், சமூகம், அரசியல் கட்டமைப்பு ஆகியவற்றில் தங்களது பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.
அதோடு மட்டுமில்லாமல் லண்டன் நகரத்திற்கு தமிழ் சமூகம் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பிற்கு தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் தமிழர் திருநாளான அறுவடை திருவிழா மற்றும் பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி தொடங்குவதால் “தமிழ் பாரம்பரிய மாதமாக” ஜனவரி மாதத்தை அறிவிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதேபோல் இந்த தீர்மானத்தை லண்டன் பெருநகர மேயர் உறுதி செய்து மிகவும் மதிப்புமிக்க தமிழ் சமூகத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.